get paid to paste

நான் கடவுள் - பெண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்

பாலா ஒரு படம் பற்றிய அறிவிப்பை வெளிவிட்டதுமே மனம் அலைபாயத் தொடங்கிவிடும். இந்த முறையும் அப்படியே, நான் கடவுள் பற்றிய விவரங்கள் வெளியாகத் தொடங்கியதுமே அலைபாயத் தொடங்கியிருந்த மனதிற்கு இரட்டைச் சந்தோஷமாய் அஜித் ஹீரோ என்ற தகவல். பின்னர் இடையில் பிரச்சனைகள் பல நடந்து அஜித் படத்திலிருந்து வெளியேற்றப்பட்ட விதத்தில் பாலா மீது எனக்கு வருத்தமே, இது நான் கேள்விபட்ட விஷயங்களை வைத்து மட்டும். பின்னர் எப்பொழுதாவது நான் கடவுள் பற்றிய விஷயங்களைக் கேட்கும் பொழுது சட்டென்று மீண்டும் பறப்பது போன்ற உணர்வு, பாவனா, கார்த்திகா, பூஜா மூவருமே எனக்கு ஒரு வகையில் பிடித்த ஹீரோயின்கள் தான்(யாரைப் பிடிக்காதுன்னு கேட்கக்கூடாது). ஒருவர் மாற்றி ஒருவர் வந்ததும் படம் மூன்று வருடம் இழுத்தடித்தது, வெளியாகப்போகும் முன் 'ஏழாம் உலகம்' பற்றியும் ஜெயமோகனின் 'நான் கடவுள்' அனுபவம் பற்றியும் படிக்க மனம் ஒரு உச்ச நிலைக்கு வந்து கொண்டிருந்தது. திரைப்படம் பார்த்து முடித்தது தான் மனம் ஒரு அமைதிக்கு வந்தது. மற்றப்படங்களைப் போலில்லாது, இந்தப் படத்தின் கதை முழுவதுமாகவே ஒருவாறு தெரிந்திருந்தது. சென்சார் போர்ட் ஆட்கள் சொன்னதாகச் சொல்லி எங்கையோ படித்தது.

படம் எனக்கு எந்த வகையிலும் ஏமாற்றம் தரவில்லை, என் எதிர்பார்ப்பை முழு அளவில் நிவர்த்தி செய்தது என்பது தான் இந்தப் படத்தைப் பற்றி நான் முதலில் சொல்ல நினைத்த இரண்டு வரி விமர்சனம்.

Trilogy என்றொரு விஷயம் சொல்லப்படுவதுண்டு, அலெஜாண்ட்ரோ கன்ஸாலஸ் இன்னாரித்துவின் அமோரெஸ் பெர்ரோஸ், 21 கிராம்ஸ், பாபெல் என்று தொடர்ச்சியாக அவர் எடுத்த மூன்று படத்தின் மையங்களுமே ஒரேமாதிரியானவை. சொல்லப்போனால் கதை சுழலும் விதமும் கூட. பாலாவின் படங்களில் சேதுவையும் சேர்த்துப் பார்த்தால் நந்தா, பிதாமகன், நான் கடவுள் படங்களை ஒரு கட்டுக்குள் அடக்கிவிட முடியும். சில சமயம் ஒரு விஷயம் மனதில் பதிந்து விட்டால் அது மனதை விட்டு விலகுவது கொஞ்சம் கடினமானது தான். அப்படித்தான் மரணம் பற்றிய விஷயமும் பாலாவிற்கு இருக்கவேண்டுமென்று நினைக்கிறேன். தொடர்ச்சியாக அவர் படத்தில் ஒரு மரணத்தை நோக்கி படம் பயணிப்பதை நாம் உணரமுடியும், இதுவரை வந்த அனைத்துப் படங்களில் படம் சட்டென்று மரணத்தில் உச்சமடைந்து முடிவதை உணர முடியும். படம் மொத்தமும் சுழன்று கொண்டே வந்து அந்தப் புள்ளியில் முடிவடையும். நான் கடவுள் படமும் அதற்கு விதிவிலக்கல்ல.

இருண்மை தான் பெரும்பாலும் பாலாவின் படங்களில் மையப்புள்ளியாக இருப்பதுண்டு, முதல் மூன்று படங்களில் விரிவடைந்த அந்தப் புள்ளி இந்தப் படத்தில் அழுத்தமாக வெளிப்பட்டிருக்கிறது. ஒருவரிடம் இருந்து எவ்வளவு தேவையோ அதை மட்டும் எடுத்துக் கொண்டு படத்தைச் செதுக்கியிருக்கிறார், ஆர்யாவிற்கும் சரி, பூஜாவிற்கும் சரி, முருகனாக நடித்தவருக்கும் சரி, தாண்டவனாக நடித்தவருக்கும் சரி எவ்வளவு தேவையோ அவ்வளவு இடம் கொடுத்திருக்கிறார். அதேபோல் தேவைப்பட்ட பாடல்கள் மட்டும் படத்தில் இடம் பெறுகின்றன அதுவும் பின்னணிப் பாடல்களாக மட்டும். பாடல்களை வெட்டியதால் படம் சுருக்கென்று இருக்கிறது. இடைவேளை வந்ததும் தெரியவில்லை படம் முடிவதும் தெரியவில்லை, ஒரு தேர்ந்த மாயக்கலை நிபுணனின் திறனோடு படத்தை செதுக்கியிருக்கிறார். பர்பெக்‌ஷன் என்பது பாலாவின் படங்களில் காணக்கிடைக்கும் இன்னொரு முக்கியமான விஷயம், படத்தின் எந்தவொரு விஷயத்திலும் காம்ப்ரமைஸ் செய்யாமல் அவர் முயற்சி செய்திருப்பது படத்தை ஆழ்ந்து பார்க்கும் பொழுது விளங்கும். ஒவ்வொரு ஷாட்டையும் இப்படி எடுக்க நினைக்கும் பொழுது நேரம் பிடிப்பது ஆச்சர்யமானது இல்லை படம் மூன்று வருடம் எடுக்கப்பட்ட விஷயம் நம் மனதிற்குள் ஆழமாய் சென்றுவிட்டதும் அப்படி மூன்று வருடம் எடுக்கப்பட்ட எந்த அற்புதமான விஷயமும் படத்தில் இல்லை என்று கேட்பதும் ஆச்சர்யமாக இருக்கிறது.

'நான் கடவுள்' படம் சொல்லும் பர்பெக்‌ஷன் நமக்கு 95% இந்திய சினிமாவில் கிடைப்பதில்லை, சாதாரணமாய் 'ஒட்டுத்தாடி' வைத்துவிட்டு படம் எடுத்து முடித்துவிடலாம் விமர்சனம் எழுதும் பொழுது 'ஒட்டுத்தாடி' வைத்ததற்கு நல்ல தாடி வைத்திருக்கலாம் என்று ஒரு வரியில் முடித்துவிடலாம். ஆனால் முழுமை கிடைப்பதில்லை அதில், முழுமைக்கான முழு உழைப்பும் 'நான் கடவுள்' படத்தில் இருக்கிறது. மொத்தமே ஐந்து ஆறு தெரிந்த நடிகர்களை வைத்துக் கொண்டு மீதி மக்களை புதிதாய்த் தயாரித்து இந்த அளவிற்கு முழுமையைக் கொண்டு வரமுடியுமென்றால் நாம் பாலாவை பாராட்டியே ஆகவேண்டும், இந்தப் படத்தில் வரும் எவரும் தனியாத் தெரிவதில்லை. அந்தக் களம் தான் முக்கியமாய்த் தெரிகிறது.

Pasted: Feb 27, 2009, 4:41:06 am
Views: 99